டிவிட்டர் சமூக வலைதளத்தின் அடையாளமாக உள்ள பறவை (குருவி) லோகோவையும், அதன் பெயரையும் மாற்ற உள்ளதாக, அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். அதனையொட்டி தற்போது டிவிட்டரின் லோகோவானது மாறியுள்ளது. குருவி லோகோ எக்ஸ் லோகோவா மாறியுள்ளது.
உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், தொழிலதிபருமான எலான் மஸ்க், டிவிட்டர் நிறுவனத்தை கடந்த ஆண்டு பல கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தார். இதையெடுத்து செலவினங்களை குறைப்பதற்காக அந்நிறுவனத்தின் ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். மேலும், ப்ளூ டிக் எனப்படும் உறுதிப்படுத்தப்பட்ட கணக்கை பெறுவதற்கு பயனார்களிடம் கட்டணத்தை விதித்தார்.
இதற்கிடையே டிவிட்டர் நிறுவனத்திற்கு போட்டியாக மெட்டா நிறுவனத்தின் மார்க் ஜூகர்பெர்க், த்ரெட்ஸ் என்ற சமூக வலைதளத்தை அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் டிவிட்டர் சமூக வலைதளத்தின் பெயரையும் லோகோவையும் மாற்ற உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். அவர் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,
டிவிட்டர் சமூக வலைதளம் மீண்டும் சீரமைக்கப்படும். அதன் பெயருக்கும் படிப்படியாக அனைத்து பறவைகளுக்கும் விடைகொடுப்போம். நல்ல லோகோ உருவாகி விட்டால், விரைவில் அது, உலகம் முழுவதும் செயல்பாட்டுக்கு வந்துவிடும் என்று அவர் அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார். தற்போது எலான் மஸ்க் குறிப்பிட்டிருந்த படியே, டிவிட்டரின் பெயரை எக்ஸ் என்று மாற்றி விட்டார். அதன் லோகோவும் குருவிக்கு பதிலாக எக்ஸ் வடிவத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது.