புதுக்கோட்டையில் திருடிய நகை மூலம் கிடைத்த பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், வங்கி ஊழியர் மாரிமுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து மாயமான மாரிமுத்து, கோடியக்கரை கடற்கரை அருகே கொலையான நிலையில் மீட்கப்பட்டார். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் வங்கியில் 14 ஆயிரத்து 743 கிராம் நகைகள் காணாமல் போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நகைகளை கண்டுபிடிக்கவும், மாரிமுத்துவை கொலை செய்தவர்களை கைது செய்யவும் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்தநிலையில், திருடப்பட்ட நகைகளை மாரிமுத்து அவரது உறவினர்கள் மூலம், அடகு வைத்து பணம் பெற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, நகைகளை அடகு பெற்ற நிறுவனங்களுக்கு காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
நகை திருட்டில் பலருக்கு தொடர்பு உள்ளதாகவும், இதன் மூலம் கிடைத்த பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக, மாரிமுத்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து, குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.