மீண்டும் துருக்கியில் அதிபர் ஆகிறார் எர்டோகன்!

துருக்கியைப் பொறுத்தவரை சமீப மாதங்களில் அதிகளவு உலக மக்களால் உச்சரிக்கப்பட்ட நாடாகும். அதற்கு காரணம் அங்கு நடந்தேறிய நிலநடுக்க துயரச் சம்பவம். கடந்த பிப்ரவரியில் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மடிந்தனர். சரியான மீட்புப் பணிகளில் அதிபர் எர்டோகன் ஈடுபடவில்லை என்று அந்நாட்டு மக்கள் அவர் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர்.

துருக்கியில் அதிபர் எர்டோகன் ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செலுத்தி வருகிறார். 2003 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை பிரதமராக செயல்பட்ட அவர், அதற்கு பிறகு பிரதமர் பதவியைக் கலைத்துவிட்டு அதிபராக மாறினார். துருக்கியின் உச்சபட்ச பதவி அதிபர்தான். அப்போது அவர் சர்வாதிகார ஆட்சி நடத்துவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்தத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் எர்டோகனுக்கு எதிராக அணி திரண்டனர். எதிர்க்கட்சிகளின் கூட்டணி பலம் வாய்ந்ததாக மாறியது. அவர்களின் சார்பாக துருக்கிய காந்தி என அழைக்கப்படும் கிளிக்டரோக்லுவை அதிபர் தேர்தலுக்கு நிறுத்தினர். மே மாதம் 15 ஆம் தேதி தேர்தலானது நடைபெற்றது. துருக்கியைப் பொறுத்தவரை வெற்றி பெறுவதற்கு 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் தேவை. கிளிக்டரோக்லு 44.79 சதவீத வாக்குகளும், எர்டோகன் 49.50 சதவீத வாக்குகளும் பெற்றிருந்தனர். யாரும் பெரும்பான்மை பெறாததால் இரண்டாவது சுற்று தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி இரண்டாவது சுற்று தேர்தல் நேற்று முன் தினம் நடைபெற்றது. இந்தில் கடும் போட்டி ஏற்பட்டது. இறுதியில் எர்டோகன் 52 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார். எதிர்க்கட்சிகளைவிட சுமார் 20 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். எர்டோகனின் 21 ஆண்டுகால ஆட்சிக்கும் முடிவு கட்ட முடியாமல் எதிர்க்கட்சிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வெற்றிபெற்ற எர்டோகன், ”தன்னை நம்பி மக்கள் இன்னும் 5 ஆண்டுகள் வாய்ப்பு அளித்துள்ளார்கள். மக்கள் என்மீது வைத்துள்ல்ள நம்பிக்கைக்கு  ஏற்ப செயல்படுவேன் என்று தெரிவித்தார்.

 

 

Exit mobile version