அமமுக கட்சியில் சசிகலாவை கழற்றிவிட்டு பொதுச் செயலாளரான டிடிவி தினகரன்

அமமுகவின் பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவை கழற்றிவிட்டு டிடிவி தினகரன் பொதுச் செயலாளராக தன்னை அறிவித்துக் கொண்டுள்ளது, அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதிமுகவின் ஒரு தனி அணி என்று கூறிவந்த தினகரன் அதன் சின்னமான இரட்டை இலை சின்னம் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரி டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வரை சென்று தோல்வியை சந்தித்தார். இரண்டு நீதிமன்றங்களும், அ.ம.மு.க.விற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க மறுப்பு தெரிவித்து, ஓ.பன்னர் செல்வம், எடப்பாடி பழனிசாமி அணியை உண்மையான அதிமுகவாக அங்கீகரித்தது.

இதனால் அ.ம.மு.க. வேட்பாளர்கள் சுயேட்சை வேட்பாளர்களாக தேர்தலை சந்தித்தனர். இந்தநிலையில் அ.ம.மு.க.வின் துணை பொதுச் செயலாளராக இருந்த டிடிவி தினகரன், பொது செயலாளராக நேற்று அறிவிக்கப்பட்டார். சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவியை தட்டிப் பறித்து, தன்னை பொதுச் செயலாளராக அவர் அறிவித்துள்ளதாக அக்கட்சியினர் முணுமுணுக்கின்றனர். இது, சசிகலா உறவினர்களையும் கடும் கோபத்திற்குள்ளாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

அ.ம.மு.க.வை தனிக்கட்சியாக பதிவு செய்யும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சசிகலா சிறையில் இருந்து வெளிவந்தவுடன் அவர் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டாலும், இதெல்லாம் சமாளிப்பு முயற்சிகளாகவே பார்க்கப்படுகிறது.

Exit mobile version