புத்தாண்டு விடுமுறைக்கு பிறகு நாடாளுமன்றம் இன்று கூடவுள்ள நிலையில், முத்தலாக் தடை மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக்குழுவிற்கு அனுப்பக் கோரிய எதிர்கட்சிகளின் தீர்மானம் மாநிலங்களவையில் பரிசீலிக்கப்படுகிறது.
புத்தாண்டு விடுமுறைக்கு பிறகு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று மீண்டும் கூடவுள்ளது. மக்களவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடை மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்திய பா.ஜ.க. அரசு முனைப்பு காட்டி வருகிறது.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாநிலங்களவையில் தேவையான உறுப்பினர்கள் இல்லாததால், இந்த மசோதாவை நிறைவேற்ற எதிர்கட்சிகளில் இடம்பெறாத எம்.பி.க்களின் ஆதரவை பா.ஜ.க. எதிர்நோக்கியுள்ளது.
ஆனால் முத்தலாக்கை கிரிமினல் குற்றமாக்கி ஆண்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வழிசெய்யும் பிரிவுக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தற்போதைய நிலையில், அதனை தாக்கல் செய்யாமல், மசோதாவில் திருத்தங்கள் கொண்டு வர ஏற்கனவே நோட்டீஸ் அளித்துள்ளன.
மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக்குழுவிற்கு மாற்றக்கோரியும் எதிர்கட்சிகள் தீர்மானம் இயற்றியுள்ளன. இந்த தேர்வுக் குழுவில் இடம்பெற வேண்டிய 11 எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பெயர்களையும் இந்த தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளன. இந்நிலையில், இந்த தீர்மானம் மாநிலங்களவையில் இன்று பரிசீலனைக்கு வரவுள்ளது.
Discussion about this post