மக்களவையில் கடும் அமளிக்கு இடையே முத்தலாக் தடுப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இஸ்லாமிய பெண்களை அவர்களின் கணவர்கள் தலாக் என்று மூன்றுமுறை கூறி உடனடியாக விவாகரத்து செய்வதை தடை செய்யும் நோக்கில் உடனடி முத்தலாக் தடுப்பு மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா மக்களவையில் நிறைவேறிய போதும், மாநிலங்களவையில் நிறைவேறாமல் நிலுவையில் இருந்தது.
இந்நிலையில், மக்களவையில் இந்த மசோதா இன்று மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவரும் எம்.பி.யுமான ஓவைசி உள்ளிட்டோர் முத்தலாக் தடுப்பு மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவையில் சிறிது நேரம் அமளி ஏற்பட்டது.
முத்தலாக் முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்காகவே முத்தலாக் தடுப்பு சட்டத்தை இயற்ற அரசு முயற்சிப்பதாக மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் விளக்கமளித்தார். இதைத்தொடர்ந்து மசோதா மீதான ஓட்டெடுப்பு நடைபெறவுள்ளது.