மக்களவையில் அவை விதிகளை மீறிய 7 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

நாடாளுமன்ற மக்களவையில் அவை விதிகளை மீறியதாக 7 காங்கிரஸ் எம்.பி.க்கள் நடப்பு நடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த திங்கள் கிழமை முதல் நடைபெற்று வருகிறது. டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக விவாதம் நடத்துமாறு காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 4-வது நாளான நேற்றும் இதே கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். மேலும், சபாநாயகர் மேஜையில் இருந்த ஆவணங்களை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எடுத்துச் சென்றனர்.

அப்போது, அவை விதிகளை மீறியதாக, மாணிக்கம் தாக்கூர், ராஜ்மோகன் உள்ளிட்ட 7 காங்கிரஸ் உறுப்பினர்களின் பெயரை, மக்களவையை வழிநடத்திய மீனாக்ஷி லெகி குறிப்பிட்டார். இதையடுத்து, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 பேரையும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து இடைநீக்கம் செய்வது தொடர்பான தீர்மானத்தை கொண்டுவந்தார்.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும் இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து மக்களவையையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

Exit mobile version