கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில், மக்கள் நீதி மய்ய பிரசார கூட்டத்தில், கமல்ஹாசன் மீது காலணி வீச முயன்ற நபரை, மக்கள் நீதி மய்யத்தினர் கண்மூடித்தனமாக தாக்கினர்.
அரவக்குறிச்சியில் அண்மையில் பிரசாரம் மேற்கொண்ட மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து என்று பேசியிருந்தார். இந்த கருத்துக்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்துள்ளது.
இந்நிலையில், அரவக்குறிச்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து வேலாயுதம் பாளையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசினார். கூட்டம் முடிந்து கீழே இறங்கிய கமல் மீது மர்மநபர்கள் கல், முட்டை மற்றும் காலணியை வீச முயன்றனர். இந்துக்கள் குறித்த அவரது சர்ச்சை பேச்சுக்கு எதிர்வினையாற்றும் வகையில் இத்தகைய செயலில் அவர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள், காலணி வீச முயன்றவர்களை சூழ்ந்துக்கொண்டு கண்முடித்தனமாக தாக்கியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
உடனடியாக அங்கு வந்த போலீசார், காலணி வீச்சியில் ஈடுபட்ட தளவாய்பாளையம் ராமசந்திரன் உட்பட 3 பேரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதற்கிடையே, தாக்குதல் சம்பவத்தையடுத்து சூலூரில் கமல்ஹாசன் இன்று மேற்கொள்ளவுள்ள இருந்த பிரசாரக்கூட்டத்திற்கு பாதுகாப்பு கருதி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.