திருச்சி ரங்கநாதர் கோயிலில் கோலாகலமாக துவங்கிய பகல் பத்து

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

 ரங்கநாதர் கோயிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா முக்கியமானதாக கருதப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி விழா கடந்த வியாழக்கிழமை திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. விழாவின் பகல் பத்து நிகழ்ச்சியின் இரண்டாம் நாளில், பெருமாள் முத்துசாயக் கொண்டை, இரத்தின அபய ஹஸ்தம், அண்டபேரண்டம் பதக்கம், ஹம்சம் காதுகாப்பு, லட்சுமி பதக்கம், முத்துமாலை, காசு மாலை, பவள மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பகல் பத்து விழாவின் ஒவ்வொரு நாளும் பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இதன் கடைசி நாளான ஜனவரி 6ம் தேதி  விழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு அதிகாலை நடைபெறவுள்ளது. பகல் பத்து நிகழ்ச்சியின் இரண்டாம் நாளான இன்று நடந்த முத்துசாயக் கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாளை,  ஏராளமான மக்கள் குளிரையும் பொருட்படுத்தாது  தரிசனம் செய்தனர்.

Exit mobile version