இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளில் 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டதில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் ஈஸ்டர் பண்டிகையின்போது, இலங்கையின் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை மற்றும் தொடர் குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 310ஆக உயர்ந்துள்ளது.
பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு வரும் 29ம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றம் கூடியது. சபாநாயகர் கரு. ஜெயசூர்யா தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தீவிரவாதிகளுக்கு நீண்ட நாட்களாக பயிற்சி அளிக்கப்பட்டு, திட்டமிடப்பட்டு, யாருக்கும் தெரியாமல் தாக்குதல்களை நிகழ்த்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதில் சம்பந்தப்பட்டவர்களை கண்டறிந்து கடுமையாக தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். சந்தேகப்படக் கூடிய நபர்களை கைது செய்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் சிறிசேன தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய, பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜவர்தனே முதல்கட்ட விசாரணையில் உள்ளூர் தீவிரவாத அமைப்புகள்தான் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளதாக கூறினார்.
Discussion about this post