அரியலூரில் தொழிற்சாலைகள் மற்றும் செங்கல் சூளைகளுக்காக கண்மூடித்தனமாக வெட்டப்பட்டுவரும் மரங்கள் பற்றிய செய்திக் தொகுப்பை தற்போது காண்போம்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் வளர்ந்திருக்கக் கூடிய மரங்கள் கண்மூடித்தனமாக அழிக்கப்பட்டுவருவது சமூக ஆர்வலர்களிடையே வருத்ததை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு சுற்றுச்சூழலையும், நிலத்தடி நீர்வளத்தையும் பாதுகாக்கும் பொருட்டு மரங்களை வளர்க்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் போதிய மழை இல்லாமல் வறட்சி மாவட்டமாக இருக்கக்கூடிய அரியலூர் பகுதியில், செங்கல் சூளைகளுக்கும், சாயப் பட்டறைகளுக்கும், லாரி லாரியாக மரங்கள் வெட்டி விற்கப்படுகின்றன.
இதற்கென்றே உள்ள வியாபாரிகள், விவசாய நிலங்களுக்குச் சென்று அங்குள்ள நல்ல மரங்களையெல்லாம் அதன் உரிமையாளர்களிடம் விலை பேசி இரவோடு இரவாக லாரிகளில் வெட்டிச் சென்று விடுகின்றனர்.
ஒரு மரக்கன்றை நட்டு அது மரமாக வேண்டும் என்றால் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு
மேல் காத்திருக்க வேண்டும். ஆனால் இவர்களோ சில நிமிடங்களில் அவற்றை வெட்டி அழித்து விடுகின்றனர்.
இதுபோன்ற செயல்களால் எதிர்காலத்தில் நிலத்தடி நீர் குறைந்து, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், மழை அளவும் குறைந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
எனவே, தமிழக அரசு சந்தனம், தேக்கு, செம்மரங்களை மட்டுமின்றி மற்ற மரங்களையும் பாதுகாக்க கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பசுமை ஆர்வலர்கள் விரும்புகிறார்கள்..
Discussion about this post