இன்று முதல் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் வாகனங்களை நிறுத்த பயண அட்டை கட்டாயம். பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் சென்னையில் இன்று முதல் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு பணத்திற்கு பதிலாக மெட்ரோ ரயில் பயண அட்டை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது மிகவும் திறமையான, வசதியான மற்றும் பாதுகாப்பான கட்டண முறைக்காகவும், அத்துடன் பணப் புழக்கத்தைக் குறைக்க வேண்டிய தேவைக்காகவும் எடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பயணிகள் வாகன நிறுத்தமிடங்களில் இருந்து வேகமாக நுழைவது மற்றும் வெளியேறுவது, பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பணமில்லா பரிவர்த்தனைகளின் வசதி உள்ளிட்ட பல நன்மைகளை வழங்கும்.
பயணிகள் மெட்ரோ ரயில் பயண அட்டையை அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்களிலும், மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்திலும் பெற்றுக்கொள்ளலாம். மெட்ரோ ரயில் பயணிகள் பயண அட்டையை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் விற்பனை செய்யும் இடத்தில் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இணையதளத்திலும் டாப் அப் (Topup) செய்து கொள்ளலாம்.
வாகன நிறுத்துமிடத்திற்கான அணுகல் பயண அட்டைகளுடன் மட்டுமே கிடைக்கும். இன்று முதல் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு பயண அட்டைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்பதால் அனைத்துப் பயணிகளும் மெட்ரோ ரயில் பயண அட்டைகளை விரைவாக பெறுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Discussion about this post