தஞ்சை அரசு மருத்துவமனையில் காவல் பணியில் திருநங்கைகள்

தஞ்சை மருத்துவக் கல்லூரியில் 8 திருநங்கைகள் காவல் பணிக்கு பணியமர்த்தப்பட்டுள்ளது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. அது குறித்த ஒரு சிறப்பு செய்தி தொகுப்பைக் காணலாம்.

 விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை திரைப்படத்தில் திருநங்கை ஒருவரை காவலாளி பணிக்கு அமர்த்துவது போல காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருக்கும். தற்போது தஞ்சை மருத்துவ கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ் அதை நிஜத்தில் செயல்படுத்தி அனைவருக்கும் முன் உதாரணமாக திகழ்கிறார். இதனை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

தஞ்சை மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு மற்றும் குழந்தைகள் நல வார்டு ஆகியவை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் முதன் முறையாக மகப்பேறு பிரிவுக்கு ராகிணி, சத்யா, தர்ஷினி, மயில், பாலமுரளி, முருகானந்தம், ராஜேந்திரன், மணிவண்ணன் உள்ளிட்ட 8 திருநங்கைகள் இங்கு காவல் பணியில் அமர்த்தப்பட்டுளளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த மருத்துவ கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் முழு சம்மதத்துடனும் வரவேற்புடனும் 8 திருநங்கைகள் பணியமர்த்தப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தங்களுக்கு பணி வழங்கிய மருத்துவக்கல்லூரி முதல்வர் மற்றும் சுகாதார துறை அமைச்சர் அவர்களுக்கு பணியில் சேர்ந்த திருநங்கைகள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் சீரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில், திருநங்கைகளை சக மனுஷியாக பாவித்து மருத்துவமனையில் காவல் பணிக்கு அமர்த்தப்படுவது சிறந்த முன்னுதாரணமாக விளங்குகிறது என்றால் மிகையல்ல.

Exit mobile version