சென்னை அமைந்தகரையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த பெண்ணைக் கடத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அந்நிறுவன மேலாளரைக் காவல்துறையினர் கைது செய்தனர்
எழும்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் அமைந்தகரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்தநிலையில் அப்பெண்ணை கடத்திய நிறுவன மேலாளர் ராஜேஷ் பிரித்வி ரகசிய இடத்தில் வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், ராஜேஷ் பிரித்வியைத் தீவிரமாகத் தேடிவந்த காவல்துறையினர், திருப்பூரில் மறைந்திருந்திருந்த அவரை சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
கடத்தப்பட்ட பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ராஜேஷ் பிரித்வி போலியான பெயர்களில் 6க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியுள்ளதும், அவர் மீது தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் பணியாற்றிய அலுவலகத்தில் ஆய்வு நடத்திய காவல்துறையினர் உதவி ஆய்வாளர் சீருடை மற்றும் போலி அடையாள அட்டைகளை கைப்பற்றினர். ராஜேஷ் பிரித்வியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல்துறையினர் அவரை சிறையிலடைத்தனர்.