விடியா ஆட்சியில் போக்குவரத்து காவல்துறை என்பது விதி மீறல் என்னும் பெயரில் மிரட்டி பணம் பறிக்கும் துறையாக மாறி வருவதாகப் புகார் தெரிவிக்கிறார்கள் வாகன ஓட்டிகள். அதுகுறித்து பார்ப்போம்.
வரிகளை உயர்த்துவது, விலைவாசி அதிகரிப்பு என்று வெகுஜன மக்களின் பாக்கெட்டுகளில் கைவைத்து வருகிறது விடியா அரசு. அதே போன்று விடிய அரசின் போக்குவரத்து காவல்துறையோ தன் பங்குக்கும் வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதம் என்னும் பெயரில் வசூல் வேட்டையை தீவிரப் படுத்தி இருக்கிறது. போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகையை பலமடங்கு அதிகரித்த நிலையில், போக்குவரத்து நெருக்கடியான இடங்களில் வாகனப் போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதை விட, வாகன ஓட்டிகளிடம் விதிமுறை மீறலுக்கு அபராதம் விதிப்பதிலே குறியாக இருக்கின்றனர். பொதுமக்கள் கஷ்டப்பட்டு சம்பாதிப்பதையும் போக்குவரத்து சிக்னலை மீறியதால் 500 ரூபாய், பின்னால் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் அணியாததால் ஆயிரம் ரூபாய் என்று அபராததத்தை தீட்டி அரசு கஜானாவிற்கு எடுத்துச் செல்வதிலேயே தீவிரம் காட்டுகின்றனர்.
பள்ளி, கல்லூரிக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் போதும் பின்னால் இருப்பவர் ஹெல்மெட் போடவில்லை என்று கூறி அபாராதம் போடுவதில் ஆர்வம் காட்டுவாதாகவும் வாகன ஓட்டிகளை எதையும் பேசவிடாமல் அதிகாரப் போக்கோடு செயல்படுவதாகவும் போக்குவரத்து போலீசார் மீது குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
தற்போது போக்குவரத்து சிக்னல்களில் கேமராக்கள் அமைத்து அதன்மூலமாகவும் விதிமீறல்களுக்கு அபராதம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பல இடங்களில் விதிமுறைகள் மீறாமலேயே அபராதம் விதிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வருவதாகவும், விதிமீறலுக்கு அபராதம் கட்டிய நிலையில் தொடர்ந்து அபராதம் கட்டச் சொல்லி குறுஞ்செய்தி வருவதாகவும் வாகன ஓட்டிகள் மத்தியில் புகார் கூறப்படுகிறது.
இதனிடையே ஒவ்வொரு போக்குவரத்து உதவி ஆய்வாளரும் தினமும் 100 வழக்குகள் கட்டாயம் போட வேண்டும் எனவும், அப்படி செய்யாவிட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதால்தான் இப்படி எல்லாம் வசூல் வேட்டை ஆடிவருவதாகவும் போலீசார் தரப்பிலேயே முணுமுணுக்கப்படுகிறது.
சேவை துறையாக இருந்தவற்றை எல்லாம் வருவாய் ஈட்டும் துறையாக மாற்றியுள்ள விடியா அரசு, போக்குவரத்து காவலையும் அதே பட்டியலில் சேர்த்து கல்லாகட்டுகிறதா என்று கேள்வி எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.