நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் நடைபெற்றதாக எழுந்த புகாரை விசாரிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்பின் நுழைவு தேர்வான நீட் தேர்வில், ஆள் மாறாட்டம் செய்து சென்னையை சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவன் தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு, இந்த புகார் மீது விசாரணை நடத்த 4 பேராசிரியர்கள் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
விசாரணையில் ஆள் மாறாட்டம் நிரூபிக்கப்பட்டால் மாணவர் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டுவார் என குறிப்பிட்டார். மாணவர்கள் சேர்க்கை குறித்து அனைத்து விவரங்களையும் மறு ஆய்வு செய்ய மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், நீட் தேர்வில் மாணவரின் ஆள்மாறாட்டம் குறித்து தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். ஆள்மாறாட்டம் செய்ததாக கூறப்படும் மாணவர் தேர்வு எழுதியது மகாராஷ்டிரா மாநிலம் என்பதால், எளிதில் ஆள்மாறாட்டம் செய்திருக்கலாம் என கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தெரிவித்தார். மாணவர் ஆள்மாறாட்டம் செய்தாரா? இல்லையா? என்பது விசாரணைக்கு பின்னரே தெரிய வரும் என்று கூறிய அவர், மாணவர் தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Discussion about this post