சபரிமலையில் நாளை நடை திறப்பு – பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள்

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கபட உள்ளதால் போராட்டங்கள் ஏதும் நிகழாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை திறக்கப்பட்டு 6-ம் தேதி இரவு சாத்தப்பட உள்ளது. இந்தநிலையில் அனைத்து வயது பெண்களும் சபரிமலையில் வழிபாடு நடத்தலாம் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பதால் இந்த முறையும் பெண்கள் வரக்கூடும் என தகவல் பரவியது.

அப்படி யாரும் வந்தால் அவர்களை அனுமதிக்கப்போவதில்லை என பாஜக மற்றும் இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன. இதன் காரணமாக சபரிமலையில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. ஒரு ஏ.டி.ஜி.பி, இரண்டு ஐ.ஜி, 5 எஸ்.பிக்கள் தலைமையில் சன்னிதானம், நிலக்கல், பம்பை, இலவங்கல் ஆகிய பகுதிகளில் 1200 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நிலக்கல் முதல் சன்னிதானம் வரை சிறப்பு பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு வரும் ஒவ்வொரு பக்தரும் தீவிர சோதனைக்கு பிறகே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். தனியார் வாகனங்களுக்கு நிலக்கல் தாண்டி செல்ல அனுமதி கிடையாது. நடை திறக்கப்படும் சமயங்களில் 2 நாட்களுக்கு முன்பே பம்பை வரை செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இம்முறை நாளை பிற்பகல் 2 மணிக்கு பின்னரே நிலக்கல்லில் இருந்து பக்தர்கள் பம்பை செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர்.

 

Exit mobile version