தமிழகமே தற்போது தக்காளி தட்டுப்பாட்டில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதனை நமது நெட்டிசன்கள் நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டனர். “ஹலோ அமலாக்கத்துறையா? இங்க ஒருத்தர் இரண்டு கிலோ தக்காளி வாங்கிட்டு போறாரு” போன்ற மீம்ஸ்கள் எல்லாம் பலே. இது நகைச்சுவையாக இருந்தாலும் ஆட்சி பீடத்தில் காலாட்டியபடி அமர்ந்து மக்கள் மீது அக்கறையற்று அதிகாரம் செலுத்தும் விடியா திமுகவிற்கு ஒரு சம்மட்டி அடிதான். ஒரு கிலோ தக்காளியானது 120 ரூபாயிலிருந்து 150 ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன் பின்னணி என்ன என்பதைக் குறித்து விளக்கமாக காண்போம்.
தக்காளி விலை திடீர் உயர்வு…!
தமிழர்களைப் பொறுத்தவரை அறுசுவை உணவு உண்பதில் நம்மவர்களுக்கு நிகர் வேறு எவரும் இல்லை. அதிலும் முக்கியமாக புளிப்புச் சுவையினை அதிகம் விரும்பி உண்ணும் வழக்கம் தமிழகத்தில் உண்டு. ஒரு காலக்கட்டத்திற்கு பிறகு புளிப்புச் சுவைக்காக பயன்படுத்தப்பட புளியை அதிகம் பயன்படுத்துவதை விட்டுவிட்டு அதற்கு பதிலாக தக்காளியைப் பயன்படுத்த தொடங்கினார்கள். இப்படிப்பட்ட தமிழர்கள் விரும்பி உண்ணும் தக்காளியின் விலை திடீரென உயர்வதற்கு காலநிலை மாற்றமும் ஒரு காரணம் என்று சுற்றுச்சூழலியலாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். தக்காளியின் விலை 2022 ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 66% அதிகமாக உள்ளது. அதேபோல வெங்காயம் 7.5 சதவீதமும், உருளைக்கிழங்கு 4.5 சதவீதமும், துவரம் பருப்பின் விலை கடந்த ஆண்டினை விட 7.8 சதவீதம் உயர்ந்து கிலோவிற்கு 130.75 ரூபாய் விலையை எட்டியுள்ளது. எல் நினோ அச்சுறுத்தலால், சம்பா சாகுபடி குறித்த கவலையில் தமிழக விவசாயிகள் இருந்து வருகின்றனர்.
அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் அம்மாநிலங்களிலிருந்து செய்யப்படும் தக்காளி இறக்குமதியானது பாதிக்கப்பட்டுள்ளது என்று விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதில் நியாயவிலைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி அறுபது ரூபாய்க்கு விற்பதனால் சில சிக்கல் எழும். காரணம் அரசே கர்நாடகா மற்றும் ஆந்திராவிலிருந்தும் தான் தக்காளியை இறக்குமதி செய்யும். அம்மாநிலங்களிலேயே இப்போது தக்காளியின் விலை கிலோவிற்கு 80 ரூபாய் என்ற கணக்கில் விற்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் கருத்து…!
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் கடந்த வாரத்தில் அளித்தப் பேட்டியில், “காலநிலை மாற்றம், உள்நாட்டில் மாறுபடும் பருவமழை ஆகியவற்றைப் பொறுத்து பணவீக்கம் தீர்மானிக்கப்படும். நம் நாட்டில் பருவமழை வழக்கமாகப் பெய்யும் என எதிர்பார்ப்பு இருந்தாலும், எல் நினோ பற்றிய கவலை அதிகமாக உள்ளது. இது உணவுப்பொருள் சார்ந்த பணவீக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் உணவுப் பொருள்கள் விலை உயரும் அபாயம் ஏற்படும்” என்று பேசியிருக்கிறார்.
வேளாண்துறை அமைச்சகம் என்ன செய்கிறது?
கோடைகாலத்தில் பயிர் நடவும் முறையானது தமிழகத்தைப் பொறுத்தவரை மிகவும் குறைவாக இருக்கும். அதிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும் தக்காளி பயிரிடும் பணியானது காலதாமதமாகி உள்ளது. தமிழகம் முழுவதும் பயிர் செய்யப்படும் காய்கறிகள் தொடர்பாக கண்காணித்து வருவது தோட்டக்கலைத் துறையாகும். தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் குறித்து புள்ளி விவரங்களை தோட்டக்கலைத்துறையினர் ஆண்டுதோறும் கணக்கிடுவர். இந்த ஆண்டு கணக்கிட்டார்களா இல்லையா என்று தெரியவில்லை. அப்படி கணக்கிட்டு இருந்தால் அல்லது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தகைய நிலைக்கு தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்திருக்காது. வேளாண் அமைச்சகத்திற்கு கீழ் செயல்படும் தோட்டக்கலைத்துறையின் செயல்பாடுகளை துறை சார்ந்த அமைச்சரான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் முறைப்படி கண்காணிக்கிறார என்பதே இங்கு கேள்விக்குறியாக உள்ளது. மேலும் தக்காளி மலிவாக கிடைக்கும் காலக்கட்டத்திலேயே அதற்கு மறுபயன்பாடு உணவுப்பொருளாக உள்ள வற்றலை அரசு கொள்முதல் செய்திருக்கலாம் என்று விவரம் அறிந்தவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால் வற்றலை மறுபயன்பாடு உணவுப்பொருளாக தோட்டக்கலைத்துறை கொண்டு வர நடவடிக்கை எடுக்காததாலும் இந்த நிலை உருவாகியுள்ளது என்று விமர்சனமும் எழுந்துள்ளது.