திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 6ம் நாளான இன்று ஹனுமந்த சுவாமி வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து பிரம்மோற்சவத்தின் 5ம் நாளான நேற்று மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முக்கிய நிகழ்வான கருட வாகன சேவை நேற்றிரவு நடைபெற்றது.
இந்தநிலையில், பிரம்மோற்சவத்தின் 6ம் நாளான இன்று ஹனுமந்த வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. ஊர்வலத்தின் போது பல மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, கோலாட்டம் ஆடியபடி கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று மாலை 5 மணி அளவில் தங்கத் தேரோட்டமும் இரவு 8 மணிக்கு யானை வாகனத்தில் சுவாமி வீதி உலாவும் நடைபெற உள்ளது.