டிஎன்பிஎல்: திருச்சி வாரியர்ஸ் அணி போராடி வெற்றி

 

டிஎன்பிஎல்-லில் முரளி விஜய்யின் அபார சதத்தினால், தூத்துக்குடி அணிக்கு எதிரான ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற திருச்சி அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் முரளி விஜய், ஆதித்யா கணேஷூடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஆதித்யா கணேஷ் 56 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடி காட்டிய முரளி விஜய் சதமடித்தார். இதன்மூலம் டிஎன்பிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இதனால் 20 ஓவர் முடிவில் திருச்சி அணி 177 ரன்கள் எடுத்தது.

178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஸ்ரீநிவாசனும், கேப்டன் சுப்ரமணிய சிவாவும் நிலைத்து நின்று ஆடினர். 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேப்டன் சிவா ஆட்டமிழக்க ஸ்ரீனிவாசன் நிலைத்து நின்று ஆடினர்.

எனினும் மறுமுனையில் திருச்சி வீரர்களின் பந்துவீச்சிற்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ அந்த அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி அணி வெற்றி பெற்றது.

Exit mobile version