டிஎன்பிஎல்: திருச்சி அணிக்கு எதிராக 41 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் அணி வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில், திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 41 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றிபெற்றது.

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திருச்சி வாரியர்ஸ் அணிகளுக்கு இடையேயான 6-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கவுசிக் காந்தி மற்றும் கங்கா ஸ்ரீதர் ராஜூ ஆகியோர் களமிறங்கினர்.

கவுசிக் காந்தி 1 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், பின்னர் ஜோடி சேர்ந்த கோபிநாத் மற்றும் கங்கா ஸ்ரீதர் ராஜூ பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கோபிநாத் 37 ரன்களிலும், கங்கா ஸ்ரீதர் ராஜூ 26 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை எடுத்தது.

149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி வாரியர்ஸ் அணி களமிறங்கியது. சூப்பர் கில்லீஸ் வீரர் அலெக்சாண்டரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திருச்சி வாரியர்ஸ் அணியினர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். சிறப்பாக ஆடிய ஆதித்யா பாரோ 29 ரன்களும், சரவண்குமார் 22 ரன்களும் எடுத்தனர். முடிவில் திருச்சி வாரியர்ஸ் அணி 20 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் சார்பில் அலெக்ஸாண்டர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Exit mobile version