முடிவடைந்தது பொறியியல் கலாந்தாய்வு! 11 கல்லூரிகளில் ஒருத்தர் கூட சேரல!

தமிழகத்தில் பி.இ., பி.டெக்., மூன்றாம் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில் 11 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்னும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. விடியா ஆட்சியில் பொறியியல் கல்லூரிகளை இழுத்து மூடும் நிலை நிலவுவதாக கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள 442 பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 22 ந் தேதி வெளியானது. கலந்தாய்வில் 1 லட்சத்து 76 ஆயிரத்து 744 மாணவர்கள் பங்கேற்க தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 3 சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெற்றது.

இதில் பொதுப்பிரிவில் 3 சுற்றுக் கலந்தாய்வில் 95 ஆயிரத்து 46 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், ஆகஸ்ட் 31 ந் தேதி வரையில் 80 ஆயிரத்து 951 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கடந்த 2022ம் ஆண்டில் 84 ஆயிரத்து 812 மாணவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதில், 79 ஆயிரத்து 183 மாணவர்கள் சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில்11 ஆயிரத்து 58 மாணவருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், ஆகஸ்ட் 31 ந் தேதி வரை 8ஆயிரத்து 475 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கடந்த 2022 ம் ஆண்டில் 8759 மாணவர்களுக்கு ஒதுக்கீடு அளிக்கப்பட்டதில், 8263 மாணவர்கள் சேர்ந்தனர்.

இது குறித்து கல்வியாளர்கள் கூறுகையில், மாணவர்களுக்கு விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்யும் முறை சரியாக புரியவில்லை என்று தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 16 பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே 100 சதவீதம் இடங்கள் நிரம்பி உள்ளதாகவும், 11 பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவரும் சேரவில்லை என்றும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். 10 சதவீதத்திற்கும் குறைவாக மாணவர்கள் சேர்ந்துள்ள கல்லூரிகளை அண்ணா பல்கலைக் கழகம் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். விடியா ஆட்சியில் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை முழுமையாக இல்லாததால், கல்லூரிகளை இழுத்து மூடும் அபாயம் நிலவுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Exit mobile version