போக்குவரத்து துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தும் நடவடிக்கையை நிறுத்தவில்லை என்றால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்திருந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்துடன் தொழிலாளர் நல ஆணையம் நாளை பேச்சு வார்த்தை நடத்துகிறது
தமிழக அரசு போக்குவரத்து துறையில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 500 ஒப்பந்த பணியாளர்களும், கும்பகோணம் கோட்டத்தில் 100 பணியாளர்களும், மாநகரப் போக்குவரத்து கழகத்தில் 520 பணியாளர்களும் ஒப்பந்த அடிப்படையில் தமிழக போக்குவரத்து துறை பணியாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது. இந்த நடவடிக்கையை உடனே கைவிட கோரி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழிய சம்மேளனத்தினர், மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆகியோரிடம், கடந்த மே மாதம் வேலை நிறுத்த நோட்டீஸ் அளித்திருந்தனர். குறிப்பாக போக்குவரத்து துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்துவது என்று சட்டம் இல்லாத நிலையில், விதிகளை மீறி தமிழக போக்குவரத்து துறை ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பதாக கூறி தான் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் வேலை நிறுத்த நோட்டீஸ் அளித்திருந்தது. வேலை நிறுத்த நோட்டீஸ் அளித்து இருந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சம்மேளனமான சிஐடியு நிர்வாகிகளை நாளை தொழிலாளர் நலத்துறை ஆணையர் பேச்சுவார்த்தைக்கு அழைத்து உள்ளார். இதில் தொழிலாளர் நலத்துறை ஆணையம், சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.