தமிழகத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளதால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டி உள்ளார்.
கோவை தொண்டாமுத்தூர், கரடிமடை பகுதியில் திமுகவினரால் அடித்து கொலை செய்யப்பட்ட அதிமுக உறுப்பினர் செல்வராஜின் வீட்டிற்கு சென்ற முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து நிதி உதவி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்த கொலை வழக்கில் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவல்துறை மிக மோசமாக நடத்திருப்பதாகவும், இறந்தவரின் மகள்கள் வருவதற்குள் அடக்கம் செய்ய வற்புறுத்தியதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.மேலும் இந்த கள்ளத்தனமான மது விற்பனையில் விடியா திமுகவை சேர்ந்த பலருக்கு தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக உறுப்பினர் கொலை வழக்கில் சாட்சி சொல்ல வருபவர்களையும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் காவல்துறை மிரட்டுவதாக குற்றம்சாட்டினார்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். அதுமட்டுமின்றி கள்ளத்தமாக மதுபானம் விற்பனை செய்ய காவல்துறை மாமூல் வாங்கி கொண்டு அனுமதி வழக்கியதாகவும் குற்றம்சாட்டினார். எனவே இந்த கொலைக்கு காவல்துறையும் உடந்தையாக உள்ளதால், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களையும் கைது செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தினார். மேலும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிடில், எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தி சட்டமன்றத்தில் விவாதிப்போம் என்றும் போராட்டம் நடத்துவோம் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை விடுத்தார். இந்த வழக்கை பொறுத்தவரை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், கள்ள மது விற்பனையை உளவுத்துறை தடுத்திருந்தால் உயிரிழப்பு நடந்திருக்காது எனவும் உளவுத்துறை தங்களது கடமையில் தோல்வியடைந்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டினார்.