இந்தி திணிப்புக்கு முதலமைச்சர் ஆதரவு என தவறான செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு எதிராக, அவதூறு வழக்கு தொடர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 5 ஆம் தேதி தனது ட்விட்டர் பதிவில், நம் தாய் மொழியாம் தமிழ் மொழிக்கு ஆதரவாக, மற்ற மாநிலங்களில் தமிழ் மொழியை விருப்பப் பாடமாக கொண்டு வரவேண்டும் என்று, தமிழ்மொழி மற்ற மாநிலங்களிலும் விரிந்து பரவி, செழித்து வளர்ச்சியடைய வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் செய்தி பதிவிட்டிருந்தார்.
இந்த செய்தியை தினகரன் நாளிதழானது, தனது முதல் பக்கத்தில், “இந்தியை திணிக்கும் மும்மொழி திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி ஆதரவு, தலைவர்கள் கடும் எதிர்ப்பு” என்ற தலைப்பில், உண்மைக்கு புறம்பாக, முதலமைச்சரின் புகழுக்கும், முதலமைச்சர் பதவிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செய்தி வெளியிட்டது.
எனவே, உள்நோக்கத்துடன் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழ் ஆசிரியர், பதிப்பாளர் மற்றும் வெளியீட்டாளர் மீது, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறைக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.