“டை”ட்டானிக் கப்பலை பார்வையிடச் சென்றவர்கள் “Die”!

டைட்டானிக் கப்பலை பார்வையிட ஐந்து தொழிலதிபர்கள் சென்று மாயமான செய்தியில் தற்போது அவர்கள் இறந்துவிட்டனர் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன. பிரிட்டன் தொழிலதிபர் ஹமீஸ் ஹார்டின், ஸ்டோக்டோன் ரஷ், பாகிஸ்தானைச் சேர்ந்த ஷஷாதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலைமான், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பவுல் ஹென்றி நெர்ஜியோலட் ஆகிய ஐந்து தொழிலதிபர்கள் டைட்டானிக் கப்பலை பார்வையிட கடலின் ஆழம் சென்றிருந்தனர். கடலின் அடியே சென்றவர்கள் மூன்று நாட்கள் ஆகியும் திரும்பி வராததால் மிகுந்த பரபரப்பு தொற்றிக் கொண்டது. அதனைத் தொடர்ந்து பேரிடர் மீட்புப் பணியாளர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து இன்றைக்கு அந்த ஐந்து தொழிலதிபர்களும் கடலில் மூழ்கி இறந்துவிட்டார்கள் என்கிற செய்தி வெளியாகியுள்ளது.

அவர்கள் சென்ற நீர்மூழ்கிக் கப்பலானது கடலின் அடி ஆழ வெப்பநிலையைத் தாக்குபிடிக்க முடியாமல் வெடித்து சிதறியிருக்கிறது. இந்த வெடிப்பானது முப்பது மில்லி நொடிகளில் ஏற்பட்டுள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. டைட்டானிக் என்று சொன்னாலே அனைவரின் ஞாபகத்திற்கும் வருவது திரைப்படம் தான். ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அத்திரைப்படத்தில் உண்மைத் தன்மையுடன் சேர்த்து ஒரு காதல் கதையையும் இணைத்து படமாக வடித்திருப்பார். படம் வந்த புதிதில் சக்கைபோடு போட்டது. உலக அளவில் டைட்டானிக் என்றால் திரைப்படமும், பனிப்பாறையும், ஜாக், ரோஸ் என்கிற கதாப்பாத்திரங்களும்தான் அனைவரின் கண்ணின் முன்பும் தோன்றும். இப்படி உலக அளவில் பிரபலமான இந்த கப்பலை மூழ்கியே இடத்திலே சென்று காண நேர்ந்தது மிகப்பெரிய துயர சம்பவத்திற்கு இட்டு சென்றுவிட்டது. தற்போது சமூக வலைதளவாசிகள் இறந்த ஐந்து தொழிலதிபர்களுக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version