திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த படவீட்டில் அழிந்துவரும் 14 – ஆம் நூற்றாண்டு சிற்பங்கள், கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
கண்ணமங்கலம் அடுத்த படவீடு கிராமத்தில் சம்புவராயர் ஆய்வுமைய அறக்கட்டளையின் செயலாளர் முனைவர் அ. அமுல்ராஜ் வரலாற்று சிற்பங்கள் குறித்த கள ஆய்வில் 16.7. 2023 அன்று ஈடுபட்டார். அப்போது படவீடு கிராமத்தில் அரசமரத்தின் அருகே அமைந்துள்ள மாரியம்மன் திருக்கோயிலில் பல்வேறு சிலைகள் மற்றும் கல்வெட்டுகள் இருப்பதை கண்டறிந்தார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்:
படைவீடு 13 ஆம் நூற்றாண்டு தொடங்கி சம்புவராய மன்னர்களின் படைநகரமாக; தலைநகரமாக புகழ்பெற்று விளங்கிய நகரமாகும். இங்கே நிலப்பகுதியில் இரண்டு கோட்டைகளும் ( அகக்கோட்டை ( பெரிய கோட்டை), புறக்கோட்டை ( சின்னகோட்டை) ஜவ்வாதுமலைமீது ( இராஜகம்பீரன் மலை) ஒரு மலைக் கோட்டையையும் அவர்கள் அமைத்துள்ளனர். அத்துடன் அவர்களின் அரசு இங்கே சிறப்புற்று இருந்த காலங்களில் படவீடு கோட்டை நகரைச் சுற்றிலும் பல்வேறு கோயில்களை எழுப்பியிருந்தனர்.
அக்கோயில்கள் யாவும் போரிலும் காலப்போக்கிலும் அழிந்தன. சில கோயில்கள் நல்ல நிலையிலும் வழிபாட்டில் உள்ளன.
படவீடு மாரியம்மன் கோயிலில் உள்ள இச்சிற்பங்கள் மிகவும் முக்கியமானவை ஆகும். கைகூப்பிய நிலையில் உள்ள ஒரு சிற்பம் அரசன் அல்லது படைத்தலைவன் ஒருவனின் உருவமாகும். அடுத்து கரண்ட மகுடத்துடன் கழுத்துவரை துண்டு பட்டு காணப்படும் சிற்பம் தெய்வத் திருமேனியின் உருவமாகும். அதே போன்று கையில் சூலம் தாங்கிய பெண் சிற்பம், நரசிம்மர் சிற்பம் ஆகியவை ஒரே இடத்தில் காணப்படுகின்றன.
இவற்றிற்கு அருகே கோயில் வாயிற்படியில் சில கல்வெட்டுகளும் அரச மரத்தடிக்கு அருகே ஒரு கல்வெட்டும் உள்ளன. இவை யாவும் 14 – ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சம்புவராய மன்னர்கள் கால சிற்பங்கள் ஆகும். இங்குள்ள கல்வெட்டுகளை தொல்லியல் துறையினர் படியெடுத்து படித்தால் பல வரலாற்று செய்திகள் அறியவரும்.
மேலும் இவ்வாறு அழிந்துவரும் சிற்பங்கள் மற்றும் அரிய கல்வெட்டுகளை பாதுகாக்க படவீட்டில் மாவட்ட நிர்வாகம், வரலாற்று அருங்காட்சியகம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.