திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் க,மோகன் காந்தி தலைமையில், ஆங்கிலத் துறை பேராசிரியர் மதன்குமார், காணிநிலம் முனிசாமி, செங்கத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மாணிக்கம் ஆகியோர், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே கள ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் பொருட்டு, சில முக்கிய சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பல்லவர் கால நடுகல் ஒன்றையும், தாய் தெய்வச்சிலை ஒன்றையும் கண்டெடுத்துள்ளார்கள். இது சார்ந்து, முனைவர் க.மோகன் காந்தி கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரின் மேற்கு பகுதியில் உள்ள மலையில் லஷ்மி நரசிம்மர் கோயில் உள்ளது. அந்த மலையின் அடிவாரத்தில் போளூர் பெரிய ஏரியின் கிழக்கு கரையில் “பொங்கல் பிரியன்” என்ற பெயரில் பல குடும்பங்களின் குலதெய்வமாக பல்லவர் கால நடுகல் ஒன்று வணங்கப்படுவதை நாங்கள் ஆய்வு மூலம் கண்டறிந்தோம் என்றும், இந்த நடுகள் 3 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்ட அழகான பலகை கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கல்லின் இடது கையில் வில்லும், வலது கையில் அம்பை எய்தபடி குதிரையில் அமர்ந்த கோலத்தில் நடுகல் வீரன் உள்ளார். வீரனின் வலது பக்க பின் தோள் பகுதியில் அம்புக்கூடு ஒன்றும் உள்ளது.
வீரனின் தோற்றமும் குதிரையின் தோற்றமும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. சேனம், கடிவாளத்துடன் குதிரையின் தோற்றம் உள்ளது. குதிரையின் முன்னங்கால்களுக்கு முன்பு சிறிய நாய் உருவம் ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நடுகல் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். போரில் பகைவர்களை வீழ்த்தி இறந்த போர்வீரருக்கு அவரின் நினைவைப் போற்றும் வகையில் நடுகல் எழுப்பப்படும். இது அன்றைய மரபு. இங்கு காணப்படும் நடுகல் வீரனும் போர்க்களத்தில் பகைவர்களிடம் இருந்து தனது நாட்டை பாதுகாத்து உயிர்விட்டவர் என கருதப்படுகிறது. அந்த வீரனின் வளர்ப்பு நாயும் போரில் பங்கு கொண்டு எதிரிகளை வீழ்த்தியிருக்கிறது என்பது இந்த நடுகல் மூலம் புலப்படுகிறது. நடுகற்களில் நாய்கள் இடம் பெறுவது அரிதிலும் அரிது.
இந்த நடுகல்லுக்கு அருகே பல்லவர் காலத்தைச் சேர்ந்த தாய் தெய்வச் சிற்பம் ஒன்றும் காணப்படுகிறது. இது 3.5 அடி உயரமும், 2 அடி அகலமும் உள்ள பலகை கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. வலது காலை தொங்கவிட்டும், இடது காலை மடித்த கோலத்திலும் உள்ளது. இந்த 2 சிற்பங்களும் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். சுமார் 1200 ஆண்டுகள் பழமையுடையவை. இந்தச் சிலையினை போளூர் மக்கள் குலதெய்வமாக வணங்கி வருகின்றனர்.