மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில், கன்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் முதல் கண்மாய் மூலம், கூத்தியார்குண்டு, கருவேலம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில், கண்மாயை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதால், அதிகாரிகள் நீரை திறந்து விடும்போது, விவசாய நிலங்களில் நீர் புகுந்து விவசாயம் பாதிக்கப்படுவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, அதிகாரிகளிடம் ஆக்கிரமிப்பை அகற்ற பல முறை கோரிக்கை விடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், திருமங்கலம்-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, திருமங்கலம் டிஎஸ்பி சிவகுமார், திருமங்கலம் வட்டாட்சியர் சரவணன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில், அவர்கள் கலைந்து சென்றனர். இதனால்அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.