உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்க உள்ள நிலையில், எந்த அறிவிப்பும் இல்லாததால், தேரோட்டம் நடைபெறுமா.. நடைபெறாதா என பக்தர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முக்கிய விழாக்களில் ஒன்றான ஆவணித்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வருகிற 31ம் தேதி குடவருவாயல் தீபாராதனையும், அடுத்தமாதம் 2ம் தேதி சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்திலும், 3ம் தேதி பச்சைசாத்தி கோலத்திலும் எழுந்தருளும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை.
இந்த நிலையில், சிவப்பு சாத்தி, பச்சை சாத்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி உண்டா அல்லது கோயில் உட்பிரகாரத்தில் நடைபெறுமா என்பதை கோவில் நிர்வாகம் அறிவிக்கவில்லை.
மேலும், தேரோட்டம் நடைபெறுமா, நடைபெறாதா என்ற அறிவிப்பும் இல்லாததால் பக்தர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Discussion about this post