மனிதர்கள் மனிதத்துடன் நடந்துகொள்ளும்போது அழகாகி விடுகிறார்கள் என்பது ஒரு பொது வழக்கு. அந்தவகையில், முகமே தெரியாதபோதும் அழகாகியிருக்கிறார் அரியானவைச் சேர்ந்த ஒரு திருடர். நாடு மொத்தமும் கொரோனாவுக்கெதிராக போராடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக வடமாநில நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறையும், மருத்துவமனைப் படுக்கைப் பற்றாக்குறையும் பெரும் கவலையாக மாறியிருக்கின்றன.
இந்நிலையில்தான் அரியானா மாநிலம் சண்டிகாரில் உள்ள ஜிண்ட் மருத்துவமனையில் உள்ள மருந்துகிடங்கிலிருந்து ஒரு பையைத் திருடிக்கொண்டு போயுள்ளார் ஒருவர்.
அவசரமாகத் திருடிக்கொண்டு போனதில் உள்ளே இருந்தது என்ன என்பதைக் கவனிக்கவில்லை. பின்னர் திறண்டு பார்த்தபோதுதான் தெரியவ்ந்தது. அவை, கொரோனா தடுப்பூசிகளான கோவாக்ஸினும் கோவி சீல்டும் என. நாடு சிக்கலில் இருக்கும் இந்த சூழலில், இந்த மருந்துகள் அவசியம் அந்த மருத்துவமனைக்கே செல்ல வேண்டும் என்று நினைத்த திருடன், மீண்டும் மருத்துவமனைக்கு செல்லவில்லை. மாறாக காவல் நிலையம் சென்றுள்ளார்.
காவல் நிலையத்துக்கு எதிரே உள்ள டீக்கடையில் இந்தப் பையைக் கொடுத்துவிட்டு, “இதில் காவலர்களுக்கான சாப்பாடு உள்ளது. நான் அவசர வேலையாக அடுத்த இடத்துக்கு சாப்பாடு டெலிவரி செய்யச் செல்ல வேண்டும். இதை நீங்கள் உள்ளே கொடுத்து விடுங்கள்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பியுள்ளார்.
திருப்பிக் கொடுக்கப்பட்ட பையும் காவல் நிலையம் வழியாக மருத்துவமனைக்குப் போய்ச்சேர்ந்தாயிற்று. தானும் போலீஸில் சிக்கிக் கொள்ளவில்லை. எனினும், என்னை மன்னித்து விடுங்கள். எனக்குத் தெரியாது என்று எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளது திருடனுக்குள் இருந்த மனிதம்.
இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து யார் அந்த திருடன் என்று விசாரித்து வருகின்றனர். அதே சமயம் இந்த சம்பவமும், மன்னித்து விடுங்கள் என்ற பதிவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.