தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்பது இடைத்தேர்தலில் நிரூபணம்: முதலமைச்சர்

விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அ.தி.மு.க.வை வெற்றிபெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் விக்கிரவாண்டியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகையில், திமுகவின் பொய் பிரசாரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் எடுபடவில்லை என்று தெரிவித்தார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிமுக பெற்றுள்ள பிரம்மாண்ட வெற்றி உண்மைக்கு கிடைத்த வெற்றி என்றும் பிழைப்புக்காக அரசியலுக்கு வருபவர்கள் ஒருபோதும் வெற்றி பெற முடியாது என்று தெரிவித்தார். மேலும், இரவு பகல் பாராமல் மக்களுக்காக உழைப்பவர்களே மக்களின் நன்மதிப்பை பெற முடியும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்பது இடைத்தேர்தல் மூலம் நிரூபணமாகி உள்ளது. விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் வாக்காளர்கள் அதிமுகவுக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்து, வெற்றிடம் என்பதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக தெரிவித்தார்.

சிறந்த நிர்வாகத்தின் காரணமாக தமிழக அரசு உள்ளாட்சித் துறையில் 11 விருதுகளைப் பெற்றுள்ளது. மேலும் பல்வேறு துறைகளிலும் சிறப்பான செயல்பாடு காரணமாக விருதுகளை பெற்றுள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர், திமுக ஆட்சியில் ஒரு விருது கூட பெறவில்லை எனவும், தங்களது குடும்பத்தை பார்த்துக்கொள்ளவும், கொள்ளையடிக்கவும் மட்டுமே அவர்களுக்கு நேரம் இருந்ததாக விமர்சித்தார்.

 

Exit mobile version