பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால், அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக லக்னோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அயோத்தியில் கடந்த 1992-ம் ஆண்டு கரசேவகர்களால், பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் பா.ஜ.க. மூத்தத் தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 49 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதில் 17 பேர் இறந்துவிட்ட நிலையில், எஞ்சிய 32 பேர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து லக்னோ சி.பி.ஐ. நீதிமன்றத்தில், உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் தினமும் விசாரணை நடந்து வந்தது. மொத்தம் 351 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, இறுதியாக அத்வானி உள்ளிட்ட 32 பேரின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பினை லக்னோ சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ் வழங்கினார். குற்றம்சாட்டப்பட்ட 32 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தாலும், அத்வானி, உமா பாரதி, கல்யாண் சிங், முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 6 பேர் காணொலி காட்சி மூலம் ஆஜராகினர்.
2,000 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை நீதிபதி யாதவ் வாசித்தார். அப்போது, குற்றம்சாட்டப்பட்ட 32 பேருக்கும் எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறிய நீதிபதி, அனைவரையும் இவ்வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்தார். பாபர் மசூதி முன்கூட்டியே திட்டமிட்டு இடிக்கப்படவில்லை என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.