கோவையில் கடந்த 25 ஆம் தேதி சோமனூர் பகுதியில் காட்டு யானை சின்னத்தம்பியை வனத்துறையினர் பிடித்து, முதுமலை வரகளியாரு பகுதியில் விட்டனர். ஆனால், ஊருக்குள் திரும்பிய சின்னதம்பி யானை, பொள்ளாச்சி வழியாக உடுமலைப்பேட்டையில் அமராவதி சர்க்கரை ஆலை பின்புறம் தஞ்சம் அடைந்துள்ளது. மேலும் இந்த யானை அந்தப் பகுதியில் கரும்புகளை சாப்பிட்டு தண்ணீர் குடித்து சுற்றித் திரிகிறது.
இந்த யானையை பிடிப்பதற்காக டாப்சிலிப் பகுதியில் இருந்து கலை மற்றும் மாரியப்பன் ஆகிய இரண்டு கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனிடையே, சின்னத்தம்பி யானையை பிடித்த இடத்தில் விட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வேட்டை தடுப்பு காவலர்கள் 24 மணி நேரமும் சின்னத்தம்பியை கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சின்னதம்பி யானை தொடர்பாக, உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கும்கியாக மாற்றும் திட்டம் ஏதும் தற்போதைக்கு இல்லை என அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அமராவதி பகுதியில் நடமாடும் யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்ப, இரு கும்கி யானைகளும், யானைகள் நிபுணர் அஜய் தேசாய் மற்றும் வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதிக்கு சென்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
எல்லா யானைகளையும் கும்கி யானைகளாக மாற்ற முடியாது என்றும், முதலில் முதுமலை வனப்பகுதிக்கு அனுப்ப திட்டமிட்டதாகவும், சிறைபிடிப்பது கடைசி வாய்ப்பாக பயன்படுத்தப்படும் என்றும் தலைமை வனப் பாதுகாவலர் கூறியுள்ளார்.
யானையை வனப்பகுதிக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, நிபுணர்கள் கருத்தை அறிய வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.