ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலத்திற்கு, ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை வழங்க போதிய நிதி இல்லை என மத்திய அரசு கைவிரித்துள்ளது.
நடப்பாண்டின் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலாண்டில், மத்திய அரசு, மாநிலங்களுக்கு 1,51,365 கோடி ரூபாய் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டியுள்ளது. இதில், தமிழ்நாட்டிற்கு, ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலத்திற்கு, ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையாக மத்திய அரசு 11,700 கோடி ரூபாய் வழங்க வேண்டும்.
இதுகுறித்து மாநிலங்களையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, எழுத்துப் பூர்வமாக பதிலளித்த நிதி இணையமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை வழங்க மத்திய அரசிடம் தற்போதைக்கு போதிய நிதியில்லை எனக் கூறியுள்ளார். கொரோனா பேரிடர் காரணமாக, ஜிஎஸ்டி வரிவசூல் குறைவாக இருப்பதால், மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை வழங்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை வழங்கும் வரை, மாநில அரசுகள் ரிசர்வ் வங்கியிடம் கடன் பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.