தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், ஒரு வருட காலம் சிறப்பு அதிகாரியின் கீழ் இயங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளதால், சங்கத்தால் பொதுக்குழுவை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
விஷால் தலைமையிலான தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில், வைப்பு நிதியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் பதிவு துறையில் புகார் அளித்திருந்தனர். இதற்கு விளக்கம் அளித்த தயாரிப்பாளர் சங்கத்தின் அறிக்கை, ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை என்பதால், பதிவாளர் தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் எழுதினார். இதைத் தொடர்ந்து, தமிழக அரசு பதிவுத்துறை அதிகாரியான சேகர் என்பவரை தயாரிப்பாளர் சங்கத்தின் சொத்துக்களை நிர்வாகிப்பதற்கான சிறப்பு அதிகாரியாக நியமித்து அரசாணை வெளியிட்டது. மேலும், ஒரு வருட காலம் சிறப்பு அதிகாரியின் தலைமையின் கீழ் சங்கம் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேதி மாற்றப்பட்டு மே 1ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சிறப்பு அதிகாரி நியமனத்தை தொடர்ந்து, பொதுக்குழுவை தற்பொழுது நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
Discussion about this post