அந்தமான் கடல் பகுதியில் இருந்து ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழகத்தை நோக்கி வருவதால், பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த 16ம் தேதி தொடங்கியது. பருவமழை தீவிரம் அடைந்து வருவதால், வரும் 20 மற்றும் 21ம் தேதிகளில் மழை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வடதமிழகம், தெற்கு ஆந்திராவை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது.
வரும் 20ம் தேதி அந்தமான் கடல் பகுதியில் இருந்து ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழகத்தை நோக்கி வருவதால், கடலோர தமிழகத்தில் ஆரம்பித்து, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்த வரையில் நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது. இந்த மாதம் இறுதி வரை இதுபோன்று மழை குறைந்தும், அதிகரித்தும் காணப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகி இருப்பதால், மாலத்தீவு, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய கேரள கடற்கரை பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.