அரசுப் பள்ளிகளில் 2 லட்சத்து 25 ஆயிரத்து 990 ஆசிரியர்கள் பணியாற்றி வருவதாக பள்ளிக் கல்வித்துறையின் புள்ளி விவரக் குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், ஆசிரியர்கள் எண்ணிக்கையை உயர்த்தவும் பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தநிலையில் பள்ளிக்கல்வி துறையின் புள்ளி விவர குறிப்பேட்டில் தற்போதைய ஆசிரியர்கள் எண்ணிக்கை விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி அரசு தொடக்க பள்ளிகளில் 62,979 ஆசிரியர்களும், நடுநிலை பள்ளிகளில் 49,447 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். உயர்நிலைப் பள்ளியில் 31,531 ஆசிரியர்களும், மேல்நிலைப் பள்ளியில் 82,033 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மொத்தமாக அரசுப் பள்ளிகளில் 2 லட்சத்து 25 ஆயிரத்து 990 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் மொத்தம் 76,361 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்தநிலையில் அரசு பள்ளிகளுக்கு தேவையான உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என தமிழக அரசு உறுதியளித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என சேர்த்து மொத்தம் 5 லட்சத்து 65 ஆயிரத்து 239 ஆசிரியர்கள் தமிழகத்தில் பணியாற்றுகிறார்கள்.