சண்டக்கோழி உள்ளிட்ட புதிய படங்கள் வெளிடும் விவகாரத்தில் தியேட்டர் சங்கத்தினர் கொடுத்த நெருக்கடியை தாக்குப் பிடிக்க முடியாமல் விஷால் அடிபணிந்து விட்டதாக திரையுலகத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
சமீபத்தில் இயக்குனர்கள் சிலர் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலுக்கு கடிதம் ஒன்றை எழுதினர். அதில் சில திரையரங்குகளின் பெயர்களை குறிப்பிட்டு அவற்றில் திருட்டு டிவிடிக்கள் தயாரிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி இருந்தனர். அந்த திரையரங்குகளில் புதிய படங்களை வெளியிடக் கூடாது என்றும் போர்க்கொடி தூக்கினர். இதற்கு முதலில் தயாரிப்பாளர் சங்கத் தலைவரான விஷாலும் ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில் அவரது புதிய படமான சண்டக்கோழி இன்று வெளியானது. சர்ச்சைக்குரிய 10 திரையரங்குகளிலும் அந்த படம் வெளியாகவில்லை. இதையடுத்து தஞ்சை மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் இனி விஷால் படங்களை திரையிடுவதில்லை என்று முடிவு செய்யப்பட்டது.
தாங்கள் திருட்டுத்தனமாக புதிய படங்களை படம்பிடிக்க அனுமதிப்பதில்லை என்றும் அப்படி இருக்கும்போது எங்கள் மீதான நடவடிக்கை தவறு என தியேட்டர் உரிமையாளர்கள் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து வரும் 22-ந் தேதி சம்பந்தபட்ட திரையரங்கு உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சனைக்கு முடிவு காணப் போவதாக விஷால் கூறியுள்ளார்.
திரையரங்கு உரிமையாளர்கள் ஒற்றுமையுடன் ஒரு விஷயத்தை எதிர்கொள்ளும் நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தில் அத்தகைய ஒற்றுமை இல்லை என தமிழ் திரையுலகில் ஆதங்கம் நிலவுகிறது. மேலும், திரையரங்கு உரிமையாளர்கள் கொடுத்த நெருக்கடிக்கு விஷால் அடிபணிந்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக, வடசென்னை படம் குறிப்பிட்ட பத்து தியேட்டர்களில் வெளியாகாத நிலையில் இது குறித்தும் வருகிற செவ்வாய் கிழமை தியேட்டர் உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர் சங்கத்தினருக்கும் பேச்சுவார்த்தைக்கு நடைபெறுகிறது.
Discussion about this post