போதை என்பது மதுபானம், புகையிலை, அபின், ஹெராயின், கஞ்சா, பான் மசாலா போன்றவைகளால் மட்டும் ஏற்படும் என்பது உண்மையல்ல. ஒரு பழக்கத்திற்கு அடிமையாகுவதும் ஒரு வித போதை தான். அதில் நல்ல பழக்கமும் உண்டு, தீய பழக்கமும் உண்டு. நல்ல பழக்கத்திற்கு நம் மனித இனம் அச்சப்பட தேவையில்லை. ஆனால் தீய பழக்கத்திற்கு நிச்சயம் அச்சமே…
இன்றைய சமுதாயம், ஒரு வித புதிய போதைக்கு அடிமையாகி வருகிறது. குறிப்பாக இளைய சமுதாயத்தை பெரிதாக அச்சுறுத்தி வருகிறது. அந்த போதை தான் ‘வீடியோ கேம்’. வெறும் பொழுதுபோக்கு அம்சத்திற்கு மட்டும் கண்டுபிடிக்கப்பட்ட வீடியோ கேம்கள், தற்போது உயிரை பறிக்கும் அளவிற்கு ஒரு கொடிய மிருகமாக உலகை வலம் வருகிறது.
இன்றைய உலகில் வெளியாகும் வீடியோ கேம்கள் பல மனித உயிரை பறிக்கும் அளவிற்கு, விளையாடுபவர்களின் மனதை தயார் செய்கிறது. ரஷ்யாவில் அறிமுகமான ப்ளூ வேல் கேம் , உலகம் முழுவதும் நிறைய இளைஞர்களின் உயிரை பறித்துள்ளது.
ப்ளூ வேல் கேம் விளையாடுவர்களின் மனதை தற்கொலைக்கு தயாராக்கும் வகையில், தொடர்ந்து அவர்களை துன்புறுத்தி, இறுதியில் உயிரை பறித்துவிடும். இதுபோன்ற கேம்கள் தற்போது வலைதளத்தில் அதிமாகியுள்ளன. ஆபத்தின் உச்சக்கட்டம் தெரியாமல், அவற்றை இளைஞர்களும் தரவிறக்கம் செய்து விளையாடி வருகின்றனர்.
வீட்டுக்கு தெரியாமல், தனிமையாக ஒரு வித மன தைரியத்துடன் விளையாடும் இவ்வித கேம்கள், மனிதனின் Self Control-ஐ முதலில் பரிசோதித்து அவற்றை படிப்படியாக குறைத்து விடுகிறது.
தென் கொரியாவில் உள்ள ப்ளூ ஹோல் என்ற கேம் நிறுவனம் “பப்ஜி” என்ற புதிய கேமை 2018ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. ஆயுதங்களுடன் விளையாடும் இந்த கேம்க்கு உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் பலர் விளையாடி வருகின்றனர். இதில் ஆசியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் அதிகம் பேர் இந்த கேமை விளையாடி வருகின்றனர். ஒரு நாளில் மட்டும் 3 கோடி பேர் இந்த கேமை விளையாடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் சுராஜ் என்ற இளைஞர் இந்த கேமிற்கு அடிமையாகி, தன் குடும்பத்தினரையே கத்தியால் குத்தி கொன்ற சம்பவமும் அரங்கேறியுள்ளது. சாந்த சொரூபியான சுராஜ், இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை இந்த கேமை விளையாடும் பழக்கம் கொண்டதாகவும், இதனால் தன்னைத்தானே தனிப்படுத்தி இறுதியில் தன் குடும்பத்தினரையே கத்தியால் குத்தி கொன்றதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மனித உயிர்களை ஆயுதங்கள் கொண்டு தாக்கும் காலங்கள் முடிந்துவிட்டது. இப்போது, கேம் என்ற புதிய ஆயுதம் மூலம் மனித உயிர்களை பறிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்திய அரசு இவ்வகையான கேம்களை தடை செய்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.
ஒரு வித போதைக்கு அடிமையானவர்கள் மட்டுமே உயிரை பறிக்கும் செயல்களில் ஈடுபட முடியும் எனக் கூறிய மனநல மருத்துவர்கள், இதுபோன்ற கேம்கள் மோசமான ஒரு வித போதையை தருவதாக அச்சம் தெரிவித்துள்ளனர். எப்படி போதை பழக்கத்திலிருந்து மீள்வது கடினமோ, அதே போல் இவ்வகையான கேம்களிலிருந்து மீள்வது கடினம் என்று மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது போன்ற மனித உயிர்களை காவு வாங்கும் கேம்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், இளைஞர்கள் இது போன்ற ஆபத்தான கேம்களை விளையாடுவதை தவிர்க்க வேண்டும். மேலும், பெற்றோர்கள் இந்த விஷயத்தில் தன் பிள்ளைகளை தொடர்ந்து கண்காணித்து வருவது அவசியம்.
Discussion about this post