கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால், ஒகேனகல்லுக்கு வரும் காவிரி நீரின் அளவு 9,500 கன அடியாக உள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, இந்த அணைகளிலிருந்து 11 ஆயிரம் கனஅடி தண்ணீர் நீர் திறந்து விடப்பட்டு வந்தது. தற்போது மழையின் தீவிரம் குறைந்து விட்டதால், திறந்து விடப்படும் நீரின் அளவு 9 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு 9 ஆயிரத்து 500 கனஅடியாக குறைந்துள்ளது. பாதுகாப்பு கருதி 10வது நாளாக பரிசல்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 9 ஆயிரத்து 200 கனஅடியில் இருந்து, 9 ஆயிரத்து 900 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.