நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அதிமுக வேட்பாளர் தங்கமணி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முத்திரை பதித்தார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தங்கமணி, அத்தொகுதியில் ஒரு லட்சத்து 201 வாக்குகளை பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி வாகை சூடியுள்ளார்.
திமுக சார்பில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வெங்கடாசலத்தை விட, 31 ஆயிரத்து 680 வாக்குகள் கூடுதலாக பெற்று தங்கமணி வெற்றி பெற்றார்.
திமுக வேட்பாளர் வெங்கடாசலம் 68 ஆயிரத்து 521 வாக்குகளை பெற்றார்.
தொகுதி மறுசீரமைப்பின்படி 2008ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட குமாரபாளையம் தொகுதியில், தங்கமணியை தவிர வேறு யாரும் வெற்றி பெற்றதில்லை. இதை மீண்டும் அவர் நிரூபித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.பி.அன்பழகன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பி.கே.முருகனை விட 28 ஆயிரத்து 100 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
2001 முதல் தற்போது வரை நடைபெற்ற 5 சட்டமன்ற தேர்தல்களிலும் பாலக்கோடு தொகுதியில் கே.பி.அன்பழகனே வெற்றி பெற்றுள்ளார்.
அதிமுக வேட்பாளர் கே.பி.அன்பழகன் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 70 வாக்குகளையும், திமுக வேட்பாளர் பி.கே.முருகன் 81 ஆயிரத்து 970 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதியில், அதிமுக வேட்பாளர் சேவூர் ராமச்சந்திரன், ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 961 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.அன்பழகனை விட 4 ஆயிரத்து 575 வாக்குகளை கூடுதலாக பெற்றார்.
திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.அன்பழகன் 98 ஆயிரத்து 386 வாக்குகளை பெற்றுள்ளார். தொடர்ந்து இரண்டாவது முறையாக சேவூர் ராமச்சந்திரன் ஆரணி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ, தம்மை எதிர்த்து போட்டியிட்ட அமமுக வேட்பாளர் டிடிவி தினகரனை விட 12 ஆயிரத்து 403 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
கடம்பூர் ராஜூ 68 ஆயிரத்து 556 வாக்குகளையும், டிடிவி தினகரன் 56 ஆயிரத்து 153 வாக்குகளையும் பெற்றனர்.
கோவில்பட்டி தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக கடம்பூர் ராஜூ வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் மாவட்டம் அவினாசி தொகுதியில், அதிமுக வேட்பாளர் தனபால், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக கூட்டணி வேட்பாளர் அதியமானை விட கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார்.
இத்தொகுதியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தனபால் வெற்றி பெற்றுள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறை தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி, இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆறுமுகத்தை விட 13 ஆயிரத்து 171 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி 66 ஆயிரத்து 480 வாக்குகளையும், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆறுமுகம் 53 ஆயிரத்து 309 வாக்குகளையும் பெற்றனர்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பண்ணாரி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.எல்.சுந்தரத்தை விட 16 ஆயிரத்து 8 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
அதிமுக வேட்பாளர் பண்ணாரி 99 ஆயிரத்து 181 வாக்குகளையும், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.எல்.சுந்தரம் 83 ஆயிரத்து 173 வாக்குகளையும் பெற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பி.கே.முருகனை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
Discussion about this post