தமிழகத்தில் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பயன்பாடு, மீண்டும் பரவாமல் தடுக்க அரசு தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டு, அங்கிருந்த பிளாஸ்டிக் பைகளையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டது. பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து தொடர் விழிப்புணர்வு பிரசாரங்களும் நடத்தப்பட்டு வருகிறது.
ஆயினும் ஒரு சில கடைகளில் வியாபாரிகள் மீண்டும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தொடங்கியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.