சாரதா நிதிநிறுவன பங்குதாரர்கள் தொடர்ந்த மனு நிராகரிப்பு

உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் சாரதா நிதி நிறுவன வழக்குகளை விசாரிக்க வேண்டுமென அந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு கடந்த 2000 முதல் 2013 வரை செயல்பட்ட சாரதா குழுமம் சுமார் 17 லட்சம் பேரிடம் 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கை தற்பொழுது சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை கடந்த 4 ஆண்டுகளாக உள்நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாகவும், அவர்கள் விசாரணையில் நம்பிக்கை இல்லை என்றும் அந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உச்சநீதிமன்ற கண்காணிப்பில் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என கோரி உச்சநிதிமன்றத்தில் அவர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, சிபிஐ ஏற்கனவே வழக்கை நடத்தி வருவதால், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று கூறி சாரதா நிதி நிறுவன பங்குதாரர்களின் கோரிக்கையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்துள்ளனர்.

Exit mobile version