வங்கக்கடலில் உருவான புயல் இன்று ஆந்திர மாநிலத்திற்கும், ஒடிசா மாநிலத்திற்கும் இடையே கரையை கடந்தது. இதனால் பலத்த புயல்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இன்று அதிகாலை 5.30 மணிளவில், வடக்கு ஆந்திரா- தெற்கு ஒடிசா இடையே கோபால்பூர் பகுதியில் டிட்லி புயல் கரையைத் தாக்கியதால் கடல் அலைகள் பெரும் கொந்தளிப்புடன் காணப்பட்டன.
165 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. புயல் காரணமாக வட ஆந்திரா மற்றும் ஒடிசாவின் 5 கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று பிற்பகலுக்குள் புயல் வலுவிழந்து மேற்கு வங்கம் நோக்கி நகரும் என்று புவனேஸ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவிலும் இன்று பலத்தமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
முன்கூட்டியே வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததால் ஆந்திராவின் விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், விழியநகரம் மற்றும் ஒடிசா மாநிலத்தின் கஜபதி, காஞ்சம், பூரி, கேந்திரபாரா மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கும் நிவாரண மையங்களுக்கும் அப்புறப்படுத்தப்பட்டனர்.
மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர்.