அதிகாரிகளை மக்கள் தேடி சென்ற நிலை மாறி, மக்களை அதிகாரிகள் தேடிச் செல்லும் நிலை அதிமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தை தொடங்கி வைத்த அவர், மக்கள் கோரிக்கை மீது ஒருமாத காலத்தில் தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தார்.
தமிழக அரசின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் தொடங்கி வைத்தார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்களின் மனுக்கள் மீது ஒரு மாதத்தில் தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு தமிழக அரசு அதிகளவில் முன்னுரிமை அளித்து வருவதாக முதலமைச்சர் தெரிவித்தார். மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் சிறப்பு திட்டமாக இந்த திட்டம் திகழும் என்றும் அவர் கூறினார்.
சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் 234 தொகுதிகளிலும் செயல்படுத்தப்படும் என்றார் அவர். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார். இதைத்தொடர்ந்து சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செட்டிமாங்குறிச்சி ஊராட்சி புது ஏரியில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் தூர்வாரும் பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.