தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழைக் காலம் முடிந்து, கடும் பனிப்பொழிவு தொடங்கி உள்ளது. பிப்ரவரி மாதத்தில் இந்தப் பனிப்பொழிவு கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தை ஏமாற்றி வந்த வட கிழக்குப் பருவ மழை இந்த ஆண்டு, இயல்பைவிட சற்று அதிகமாகப் பெய்து, தமிழகத்தைக் குளிர வைத்தது. அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்குப் பருவ மழையால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஏரி, கண்மாய், குளங்கள் நிரம்பின. சென்னையில் நிலவி வந்த தண்ணீர் தட்டுப்பாட்டையும் வட கிழக்குப் பருவ மழை தீர்த்து வைத்தது. மேலும், டிசம்பர் 31-ம் தேதியோடு வட கிழக்குப் பருவமழை முடிவுக்கு வந்தாலும், அதற்கடுத்த சில நாட்களிலும் சென்னையில் மழை நீடித்தது. இந்நிலையில், தற்போது பனி பெய்யத் தொடங்கி உள்ளது. எதிரில் வரும் வாகனங்கள் கண்ணுக்குத் தெரியாதவகையில் சென்னையில் நேற்றும் இன்றும் பனி மூட்டம் காணப்பட்டது. இது படிப்படியாக அதிகரித்து பிப்ரவரி மாதம் கடுமையாக அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post