சென்னை தியாகராய நகரில் மக்கள் கொரோனா அச்சம் இல்லாமல் கூட்டம் கூட்டமாக பொருட்கள் வாங்கிச் சென்றதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
இன்று முதல் ஒருவாரத்திற்கு தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நேற்றே வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க சென்னை தியாகராய நகரில் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, ரங்கநாதன் தெருவில் திருவிழா காலங்களைப் போல மக்கள் ஷாப்பிங்கில் ஈடுபட்டது கொரோனா பரவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜவுளிக்கடைகள், அலங்காரப் பொருட்கள், மளிகை கடைகள், காய்கறி கடைகள், பழக்கடைகள் என அனைத்திலும் மக்கள் அதிக அளவில் கூடினர். திடீரென ஊரடங்கு அறிவித்ததால், வேறு வழியின்றி பொருட்கள் வாங்க வந்திருப்பதாகவும், அரசு முறையாக திட்டமிட்டு கடைகள் இயங்க வழிவகுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.