ஒடிசாவில் ஃபானி புயல் கோரத்தாண்டவம் ஆடியுள்ள நிலையில், புயல் பாதிப்புகளை நேரில் ஆராய நாளை மறுதினம் பிரதமர் மோடி ஒடிசா செல்லவுள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதிதீவிரப் புயலாக அறிவிக்கப்பட்டுள்ள ஃபானி புயல், ஒடிசாவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புயலின் பாதிப்புகள் குறித்து மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்த பிரதமர் மோடி, ஒடிசாவுடன் இந்திய மக்கள் அனைவரும் துணை நிற்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிலையில் நாளை மறுதினம் ஒடிசாவில் ஃபானி புயல் பாதிப்புகள் குறித்து நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். புயல் பாதிப்புகள் குறித்து ஒடிசா மாநில ஆளுநர் மற்றும் முதலமைச்சரிடம் கேட்டறிந்ததாகவும், இந்த நேரத்தில் ஒடிசா அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த கடுமையான நேரத்தில் தன்னம்பிக்கையுடன் ஒடிசா மாநில மக்கள் உள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
இதையடுத்து மேற்குவங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதியிடமும் அம்மாநில புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்ததாக அவர் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஒடிசாவில் புயல் பாதிப்புகள் அதிகளவில் உள்ள நிலையில், அங்கு நாளை நடைபெறுவதாக இருந்த நீட் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
Discussion about this post