சந்தனத்தால் வாகன எண்ணை மறைத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்

சென்னையில் நடந்து சென்ற பெண்ணிடம் 7 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற கொள்ளையனை, காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு கைது செய்தனர். 

சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள அஷ்டலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஹேமலதா. இவர் கடந்த 2ஆம் தேதி நடந்து சென்றபோது கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்கச் செயினை பைக்கில் வந்த மர்ம நபர் பறித்துச் சென்றார். இதுகுறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரை தொடர்ந்து, காவல் ஆய்வாளர் ரவீந்திரன் தலைமையிலான தனிப்படை, சுமார் 7 கிலோ மீட்டர் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில் ஒருவர், அதே இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து செல்வதை உறுதி செய்தனர். இதையடுத்து இருசக்கர வாகன மெக்கானிக் கடை உரிமையாளரிடம், நடத்திய விசாரணையில், இருசக்கர வாகன உரிமையாளரின் விவரம் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘சம்பவத்தன்று நான் பைக்கில் எங்கும் செல்லவில்லை’ என்று முதலில் கூறிய அவர், அதன்பின்னர் கடந்த 2ஆம் தேதி தன்னுடைய நண்பர் லட்டு விஜயகுமார் கடைக்குச் செல்வதாகக் கூறி இருசக்கர வாகனத்தை வாங்கிச் சென்றதாக கூறியுள்ளார்.

இதையடுத்து குற்றவாளியை உறுதி செய்த காவல்துறையினர் லட்டு விஜயகுமாரின் முகவரியை சேகரித்த காவல்துறை, பூதப்பேடு என்ற இடத்தில் அவரை மடக்கிப் பிடித்தனர். அவரிடமிருந்து 7 சவரன் தங்கச் செயின், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் துரிதமாக செயல்பட்ட மதுரவாயல் குற்றப்பிரிவு காவல்துறை ஆய்வாளர் ரவீந்திரன் மற்றும் தனிப்படையினரை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் பாராட்டினார்.

Exit mobile version